Sunday, 26 June 2016

abirami anthaathi (1,2)

அபிராமி அந்தாதி

காப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு
ஞானமும நல்விதையும் பெற
1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:
பிரிந்தவர் ஓன்று சேர
2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

Saturday, 25 June 2016

கோளறுபதிகம் (11`)

11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

Friday, 24 June 2016

கோளறுபதிகம் (10)

10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.

Tuesday, 21 June 2016

கோளறுபதிகம் (9)

9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேருமுதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.

Tuesday, 14 June 2016

கோளறுபதிகம் (8)

8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

Monday, 6 June 2016

கோளறுபதிகம் (7)

7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.