மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" [1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்திஇங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில்சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.
இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.
அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன்தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.
1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.
அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். (தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர் நாள்கொண்டாடப்படுகின்றது)[2]
இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.[3][4]
பகவத் கீதை, ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார். அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார். இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதிஉடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
(மஹாத்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு பதிவு போட எண்ணி நிறைய பத்திரிககளை படித்து குறிப்புகள் எடுத்தேன். பதிவு மிகவும் பெரிதாக போகிறதே என்று பாதியிலேயே நிறுத்தவேண்டிய கட்டாயம். முழுவதுமாக பதிவு போட முடியல ஸாரி)
மஹாத்மா காந்தி அவர்கள் பற்றிய பதிவு அருமை. இதில் பல தகவல்கள் விக்கிபீடியாவிலிருந்து தங்களால் திரட்டப்பட்டிருக்கும் என்றும் தெரிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஆமா சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
ReplyDelete