Tuesday 31 May 2016

கோளறுபதிகம் (6)

6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம்ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

Tuesday 24 May 2016

கோளறுபதிகம் (5)

5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

Wednesday 18 May 2016

கோளறுபதிகம் (4)

4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

Tuesday 3 May 2016

கோளறுபதிகம் (3)

3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.